நடிகர் ரஜினிக்கு கோவா திரைப்பட விழாவில் விருது அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்டது தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

நடிகர் ரஜினிக்கு கோவா திரைப்பட விழாவில் குளோபல் ஐகான் விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் சகோதரர் ரஜினிக்கு மனமார்ந்த வாழ்த்து என பேட்டி கொடுத்து ஜெயக்குமார் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டார்.

இதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூவோ, வல்லவர், நல்லவர் ரஜினிக்கு விருது சரியான அங்கீகாரம் என்று ஒரு படி மேலே சென்றார். இதே போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ரஜினிக்கு விருது கொடுத்ததை பாராட்டி பேட்டி கொடுத்தார். இப்படி ரஜினிக்கு விருது கொடுத்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவருமே குஷி மூடில் சுற்றித் திரிகின்றனர்.

விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்திக் குறிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த விவகாரத்தில் திமுக தரப்பு மூச்சு விடாமல் இருக்கிறது. வழக்கம் போல் ரஜினிக்கான விருதை அரசியலாக்கியதில் திமுகவின் ஐடி விங்க் பின்னால் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதுவும் வழக்கம் போல் ரஜினிக்கு சாதகமான ஒரு விஷயமாகிவிட்டது. இதனால் ரஜினி விருது விஷயத்தில் திமுக தரப்பு மீண்டும் கப்சிப் ஆகியுள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். அதோடு நிற்காமல் ரஜினியுடன் பேசியதை அறிக்கையாக வெளியிட்டு தம்பட்டமும் அடித்துள்ளார் வைகோ.

இப்படி ரஜினி விருது தமிழக அரசியலை ஒரு சுத்து பரபரப்பாக்கியுள்ளது. இப்படி ரஜினிக்கு திடீரென அனைவரும் பாய்ந்து பாய்ந்து வாழ்த்து சொல்வது அவரது அரசியல் கட்சி அறிவிப்பு விரைவில் நிகழ உள்ளது என்பதற்கு தான் என்கிறார்கள்.