எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளி, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்கவர்ந்தவர். 20 வயதில் பாடத் துவங்கி 55 ஆண்டுகளாக பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளரான கே.வி.மகாதேவனால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து இன்றைய இளம் இசையமைப்பாளர்களின் இசையிலும் தனது இனிய குரலை பதிவு செய்துள்ளார்.  

அவர் கர்னாடக இசையை முறையாக படிக்கவில்லை என்று கூறியிருந்தாலும், சங்கராபரணம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது இசைத்திறனை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருப்பார். துடிக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்தவர், ஒருசில படங்களுடன் இசையமைப்பதை நிறுத்திக் கொண்டது ரசிகர்களுக்கு வருத்தமே. அவர் தமிழில் கேளடி கண்மணி, காதலன், பிரியமானவளே, திருடா திருடா, ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும், சில படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது திரையுலக பயணத்தில் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அகன்ற திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் பாடி மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இசைப் பிரியர்கள் அனைவருக்குமே பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார் சாவித்ரி, மகன் பாடகர் எஸ்.பி.சரண் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல், தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது என வைகோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும். திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்.அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.