இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் வகையில் பேசிய மகன் ஓபி ரவீந்திரநாத்தை அழைத்து ஓபிஎஸ் கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் முத்தலாக் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து அதிமுக எம்பி ரவீந்திரநாத்  குமார் மக்களவையில் பேசினார். முத்தலாக் விவகாரத்தில் அதிமுக எதிர் நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் இதனை மீறி ரவீந்திரநாத் பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ரவீந்திரநாத் பேசியது ஒட்டு மொத்த அதிமுக மட்டும் அல்லாமல் அரசியல் நோக்கர்களையும் அதிர வைத்தது. காரணம் நாம் முதலில் இந்துக்கள் பிறகு தான் மற்றது என்கிற ரீதியில் ரவீந்திரநாத் பேசியிருந்தார். இந்த பேச்சு அதிமுக எம்பியிடம் இருந்து வந்தது மற்ற மதத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ஏனென்றால் ஜெயலலிதா கூட இப்படி எல்லாம் பேசியது இல்லை. மேலும் துணை முதலமைச்சரின் மகன், அதிமுக மக்களவை குழு தலைவர் என பொறுப்பு வகிக்கும் ஒருவர் இப்படி ஒரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்று ஒரு சார்பாக பேசலாமா என்று விமர்சனங்கள எழுந்தன. மேலும் அதிமுகவின் சீனியர்கள் சிலரும் கூட இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளியிட்டனர்.

மேலும் ஓபி ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கவனத்திற்கும் சென்றதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து மகனை அழைத்த பன்னீர் தற்போது நீ ஒரு அரசியல்வாதி, எம்பி, அதிமுகவின் முக்கிய பிரபலம் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்ததாக சொல்கிறார்கள். ஆனால் ரவீந்திரநாத் துவக்கம் முதலே தனியாக சிந்திக்க கூடியவர் தன்னுடைய விருப்பத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் என்கிறார்கள். 

அரசியலில் மட்டும் அல்ல தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கூட ரவீந்திரநாத்தின் வழி தனி வழி என்கிறார்கள். அவர் யார் பேச்சையும் கேட்பது இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் புலம்புகிறார்கள்.