நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பிரபல தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில்;- பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

 

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கனவே முதல்வர் எச்சரிக்கையும் மீறி தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.