Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்
Vijay : இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார். எனவே அவர் நடித்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது.
மதுரை ஆதீனம் பேச்சு
மதுரை பழங்காநத்தத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடந்தது. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், ‘கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என்று சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார். எனவே அவர் நடித்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது. சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது, தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது ?’ என்று பேசினார்.
விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை முழுவதும் மதுரை ஆதீனத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், ‘மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்கள், தளபதி விஜயை பத்தி தப்பா பேசலாமா? இது தப்பு இல்லையா ? வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்துங்கள்.
அர்ஜுன் சம்பத் பேட்டி
எங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை’ என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசியல் வாதிகளாலும், சினிமா ரசிகர்களாலும் மதுரை ஆதீனம் அச்சுறுத்தப்படுகிறார்.
மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்கிறார் என்றும், நாங்கள் பாய்ந்து விடுவோம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் கூறுவது அபாயகரமான போக்கு ஆகும். சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார், அப்படி குரல் கொடுப்பதால், அதிமுக, பாஜக ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது. விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
நடிகர் விஜய்
தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது. விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார். அவருக்கும் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தேவாலயம் சொத்துகள் கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிற பொழுது, ஏன் ஆலய சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். எங்களது உரிமைக் குரலாக ஆதினம் இருந்து வருகிறார்.
மதுரை ஆதீனத்தை பற்றிப் பேசிய அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். அதற்கு மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னால் மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : "ஆதீனத்தை தொட்டு பாருங்க.. திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டீங்க !" திமுகவுக்கு சவால் விடும் எச்.ராஜா !
இதையும் படிங்க : "இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !