"இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !
Annamalai : மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்து திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பேச்சு
நாமக்கல்லில் மத்திய பாஜகவின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் என். பி.சத்தியமூர்த்தி, மாநில துணைத் தலைவர்கள் வி.பி துரைசாமி, கே.பி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 45 நாட்களை கடந்த நடந்து வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
இதைப்பார்த்து திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 517 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 15 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. இதைக்கேட்டால் மத்திய அரசு நிதி வழங்காமல் ஓர வஞ்சனை செய்கிறது என சொல்கின்றனர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தாண்டு நான்காண்டு வேகமாக முடிய வேண்டியது தான் என இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும்.
பாஜக Vs திமுக
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன்னாக உள்ளார். மத்திய அரசு நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக அமைச்சர்கள் போகமாட்டார்கள். கூட்டம் முடிந்த பின் மத்திய அரசிடம் இருந்து வரும் குறிப்பை எப்படி மாநில அரசு திட்டமாக மாற்றலாம் என ஆலோசனை செய்வார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் 13 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஒருவர் கூட பதில் கடிதம் எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள பாதி மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களின் மனைவி பெயரில் உள்ளது.
அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழைய சேகர்பாபுவை பார்க்காதீர்கள் என கூறுகிறார். அதைப்பார்க்கத்தான் பாஜக உள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஜி ஸ்கொயர் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அவருடைய அனுபவத்திற்கு இது அழகில்லை. அவரை ஜி ஸ்கொயர் முத்துசாமி என அழைக்கலாம். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது இம்மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை முதல் வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் காவல் துறையினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர்.’ என்று பேசினார்.
இதையும் படிங்க : DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!
இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!