Hijab issue: நிறுத்துங்க இந்திய தலைவர்களே.. ஹிஜாப் அணிந்து செல்வதை மறுப்பது பயங்கரமானது.. குரல் கொடுத்த மலாலா!
“படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய கல்லூரி கட்டாயப்படுத்துகிறது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்"
ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச பெண்ணுரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுஃப்சாய் கண்டித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹிஜாப் அணிந்து வந்தால், பதிலுக்கு காவித் துண்டு அணிந்து வருவோம் என்று கூறி பல பகுதிகளிம் இந்துத்துவ மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹிஜாப் அணிய பல கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்தன். கர்நாடக அரசும் இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது தேசிய அளவில் சர்ச்சையானது.
இந்நிலையில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணிடம் காவித் துண்டு அணிந்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பி சுற்றினர். இதற்கு பதிலடியாக அந்தப் பெண், ‘அல்லாஹு அக்பர்’ கோஷம் எழுப்பினார். இந்தக் காணொலி காட்சி இணையத்தில் வைரலானது. இதற்கிடையே ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளி (பியூ கல்லூரி), கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் டொடர்பாக தேசிய அளவில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதெச பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுஃப்சாய் ட்விட்டர் மூலம் குரல் எழுப்பியுள்ளார். அதில், “படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய கல்லூரி கட்டாயப்படுத்துகிறது. ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்" என்று பதிவில் மலாலா தெரிவித்துள்ளார்.