வழக்கம் போல், அனுமதி மறுத்து விட்டோம் என்று கூறி போராட்டத்தை நடத்த அனுமதித்து விட்டு  கைது நாடகத்தை அரங்கேற்றாமல், முன் எச்சரிக்கையோடு  செயல்பட வேண்டும்.

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் மத அடிப்படைவாத அமைப்புகள் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட செய்வது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பியூ கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு போட்டியாக இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்தார்கள். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து கர்நாடக அரசு, பியூ கல்லூரிகளில் ஹிஜாப், காவித் துண்டுகளை அணிந்து வர தடை விதித்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர அரசு விதித்த தடை செல்லும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழகத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழகத்தில் உள்ள சில மத அடிப்படைவாத அமைப்புகள் கல்லூரி மாணவர்களை சிலரை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகள் வருகிற வெள்ளிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதி பூங்காவான தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துடிக்கும் மத அடிப்படைவாத சக்திகளை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 

வழக்கம் போல், அனுமதி மறுத்து விட்டோம் என்று கூறி போராட்டத்தை நடத்த அனுமதித்து விட்டு கைது நாடகத்தை அரங்கேற்றாமல், முன் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கர்நாடகத்திலும் இதே போன்ற மத அடிப்படைவாத சக்திகளின் தூண்டுதலினால்தான் ஹிஜாப் விவகாரம் தீவிரமாகியது என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க எண்ணும் தீய சக்திகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.