தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிகமாக வாக்களித்த தொகுதிகள் என்ற பெருமையைக் கிராமப்புறங்களைச் சேர்ந்த தொகுதிகளே பெற்றுள்ளன.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 71.80 சதவீத வாக்குகள் பதிவாயின. தமிழகத்திலேயே தருமபுரி தொகுதியில் அதிக வாக்குகளும் தென் சென்னை தொகுதியில் குறைந்த வாக்குகளும் பதிவாயின.

 
இந்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதி நிலவரம் தெரியவந்துள்ளது. இதன்படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 85.77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. தமிழகத்திலேயே சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக பதிவான தொகுதி என்ற பெருமை குளித்தலைக்குக் கிடைத்துள்ளது.
இதற்கு அடுத்ததாக தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 85.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன். இதேபோல கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 84.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

 
தமிழகத்தில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஆன தொகுதிகள் அனைத்துமே சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே உள்ளன. தென் சென்னை  நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிதான் தமிழகத்திலேயே குறைந்த வாக்குப்பதிவு செய்த தொகுதி. இங்கே 54.78 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதேபோல இதே தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார் சட்டப்பேரவைத் தொகுதியில் 55.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 56.30 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.


இதன்மூலம் கிராமப்புறங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவும் நகர்ப்புறங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவும் ஆகியுள்ளன.