ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா என இரண்டு வாரத்தில் பதிலளிக்கும்படி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர், தான் ஜெயலலிதாவின் மகள் எனவும் அதனால் ஜெயலலிதாவின் உடலை அவர் சார்ந்த வைணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதால் அவரது உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அம்ருதா ஜெயலலிதாவின் மகள்தானா என்பதை அறிந்துகொள்ள டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தார். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கை எனக்கூறி அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு அம்ருதா தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், டி.என்.ஏ பரிசோதனை செய்வதே உண்மையைக் கண்டறிவதற்கான தீர்வு என நீதிமன்றம் கருதியது. எனவே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில், பரிசோதனைக்காக ஜெயலலிதாவின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதால், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.