high court questioned palanisamy faction on cap symbol case

தொப்பி சின்னத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்ய முடியுமா? என முதல்வர் பழனிசாமி தரப்பிடம் கடுமையாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டதால், கடந்த முறை தான் போட்டியிட்ட தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாமல் போகலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக டெல்லி உயர்நீதிமன்றத்தில், இரட்டை இலை ஒதுக்கீட்டுக்கு எதிராக தினகரன் தாக்கல் செய்த மனுவில், தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

ஆனால், ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்படக்கூடாது என கோரப்பட்டது. 

இரட்டை இலை ஒதுக்கீட்டை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஒன்றாம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, சின்னம் ஒதுக்குவதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் என ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, தொப்பி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியதோடு இதுதொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தினகரன் மட்டும் தொப்பி சின்னத்தை கோரினால், தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால், மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கோரியுள்ளதாக ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று வேட்பாளர்களும் ஆளும் தரப்பால் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டவர்கள் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தொப்பி சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக இடைக்கால தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 4-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.

அதன்படி, அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை ஒதுக்கக்கோரிய நிலையில், ஒருவருக்கு மட்டும் எப்படி தொப்பியை ஒதுக்க முடியும் என ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதி, தொப்பி சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக நீங்கள் செய்ய முடியுமா? என கடுமையாக கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது.