high court ban for ops son arrest

ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இதையொட்டி அதிமுகவில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இரு அணிகளும் இரு துருவங்களாகவே இருந்தன. எந்த பகுதியில் பிரச்சாரம் செய்தாலும், அங்கு அடிதடி சம்பவங்கள் நடந்தன.

இதைதொடர்ந்து கடந்த வாரம் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். நேதாஜி நகர் 3வது தெருவில், வாக்கு சேகரித்தபோது, டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது.

இதில் பலர் தாக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தால், தண்டையார்பேட்டை பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா ஆகியோரை கைது செய்ய போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவீந்திரநாத் மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்ய தடை விதித்தது.

மேலும், மோதல் சம்பவம் மற்றும் கைது நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ஆர்கே நகர் இன்ஸ்பெக்டருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை மறுநாள் (13ம் தேதி) ஒத்தி வைத்தது.