முன்னாள் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் காங்கிரஸின் மூத்த தலைவர் என்றுதான் ப.சிதம்பரம் அறிமுகமாவார். ஆனால் ப.சிதம்பரம் ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம் ஆகும்.

முந்தைய மதுரை மாவட்டம், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் ப.சிதம்பரம். இவரது தந்தையார் பெயர் பழனியப்பன் தாயார் பெயர் லட்சுமி ஆச்சி என்பதாகும். செட்டிநாட்டு நகரத்தார் எல்லாம் சேர்ந்து தங்களுக்கென ஒரு ராஜாவை தேர்ந்தெடுத்தார்கள்; அவர்தான் ராஜா சர் அண்ணாமலை செட்டியார். அவரது வாரிசுகளில் ஒருவர் தான் ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி ஆவார். அந்த வகையில் சிதம்பரம் ராஜ குடும்பத்து உறுப்பினரும் ஆவார்.

பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் என பல நாடுகளுக்கு சென்று ஒரு அரசாங்கமே நடத்தும் அளவிற்கு பெரிய அளவில் பொருட் செல்வத்தை சேர்த்தவர் தான் ராஜா அண்ணாமலை செட்டியார் மற்றும் முத்தையா செட்டியார். ஒரு கட்டத்தில் மியான்மர் அரசு அதிக கெடுபிடிகளை காட்டியபோது தங்களுக்கான அரண்மனை மற்றும் நகரத்தை செட்டி நாட்டைச் சேர்ந்த கானாடுகாத்தானில் நிறுவினார்கள்.

அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்கான குடியிருப்புகளை நகரத்தார்கள் நிர்மாணித்துக் கொண்டார்கள். தங்களுக்கான செட்டிநாட்டு அரண்மனைகளை கட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில் சிவகங்கை, மதுரை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வியும் தமிழுக்கான சேவையை பலவகையிலும் ஆற்றி வந்தனர். 

தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலை செட்டியார் ஆற்றிய பங்கு அளப்பரியது. மதுரையில் தமிழ்ச்சங்கம் சென்னையில் தமிழ்ச்சங்கம்.. தமிழ் வளர்ப்பதற்காக அண்ணாமலை மன்றம் என்ற பெயரில் கட்டிடங்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல தமிழ்ச் சேவை ஆற்றினார். இந்த மாபெரும் தமிழ் தொண்டரின் பேரன்களில் ஒருவர்தான் இன்று ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆவார்.

 சிதம்பரத்தின் இந்த கைது குறித்து கேள்விப்பட்டதும் அவரது ராஜ குடும்பத்து உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்களாம்.