அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசிய கருத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் எஸ்.வி.சேகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அப்போது அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்;- பாஜகவிடம் இருந்து எந்த நேரத்தில் தனியாக பிரிந்து செல்லலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்றார். அதிமுக அமைச்சரின் பேச்சால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த பேச்சுக்கு தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பை அடுத்து பாஜக உடனான எங்களது கூட்டணியை பிரிக்க முடியாது அமைச்சர் பாஸ்கரன் அந்தர் பல்டி அடித்தார். 

 

இந்நிலையில், அதிமுக அமைச்சர் பாஸ்கரின் கருத்துக்கு, நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா⁉️ ஹல்லோ ராஜ்பவனா என்று கூறியுள்ளார். ஏற்கனவே மத்திய பாஜக அரசின் தயவால் அதிமுக ஆட்சி நடைபெறுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வரும் நிலையில் அமைச்சரை மிரட்டும் தொனியில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.