திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க அக்கட்சி தலைவர் ஸ்டாலினை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் நேரடியாக செல்போனில் தொடர்பு கொண்டது தான் தற்போது இரு கட்சிகளிலும் ஹாட் டாபிக்.

அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடம் என்று கூறியது முதலே ஸ்டாலின் சோகமான மனநிலைக்கு சென்றுள்ளார். இந்த 2020ம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக உயிரிழக்கும் 3வது திமுக எம்எல்ஏ அன்பழகன் ஆகும். ஏற்கனவே குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி என உயிரிழந்த நிலையில் நேற்று அன்பழகன் காலமாகியுள்ளார். இது ஸ்டாலினுக்கு மிகுந்த வேதனையையும் தந்துள்ளது. அதிலும் சென்னை திமுகவின் மிக முக்கிய நிர்வாகி அன்பழகன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே ஸ்டாலின் தினந்தோறும் அவரது உடல்நிலை குறித்து மணிக்கு ஒரு முறை விசாரித்துள்ளார்.

ரெலா மருத்துவமனையின் மருத்துவர்களை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அழைத்து சிகிச்சை விவரங்களை கேட்டறிந்துள்ளார். ஆனால் நேற்று காலை ஸ்டாலினை அழைத்து அன்பழகன் மிகவும் கவலைக்கிடம் என்று கூறியதும் ஒரு நிமிடம் ஆடிப்போயுள்ளார். பின்னர் சமாளித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் தான் அன்பழகன் மறைவு பற்றிய செய்தி ஒளிபரப்பானது. இந்த நிலையில் திடீரென அவருடைய செல்போன் எண்ணுக்கு ஓபிஎஸ் நேரடியாக அழைத்துள்ளார். எடுத்ததும், நான் ஓபிஎஸ் பேசுறேன், தைரியமாக இருங்கள் என்று கூற ஒரு நிமிடம் ஸ்டாலின் எதுவும் பேச முடியாமல் நின்று இருக்கிறார்.

பிறகு தான் இயல்பு நிலைக்கு வந்த ஸ்டாலின், ஓபிஎஸ்க்கு நன்றி சொல்லி போனை வைத்துள்ளார். பொதுவாக ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தாரை அழைத்து இரங்கல் சொல்வது தான் வழக்கம். ஆனால் அன்பழகன் திமுகவிற்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்நது தான் ஓபிஎஸ், ஸ்டாலினை தொடர்பு கொண்டதாக கூறுகிறார்கள். அதே சமயம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனும் உயர் பதவியில் இருக்கும் ஓபிஎஸ், இப்படி ஒரு எம்எல்ஏ மறைவுக்கு ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளுக்கு இடையே மீண்டும் மோதல் சூடுபிடித்துள்ளது. வரிசையாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் அணிக்கு சென்று வருகின்றனர். விரைவில் சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் திமுக தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓபிஎஸ் பேசியிருப்பது ஒரு சுமூகமாக அரசியல் சூழலை உருவாக்கத்தான் என்கிறார்கள்.