தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (20-11-2020) தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 21-11-2020 மற்றும் 22-11-2020 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். 

23-11-2020 அன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 24- 11- 2020 கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்சும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் வைப்பாறு (தூத்துக்குடி) 10 சென்டி மீட்டர் மழையும், எட்டயபுரம் (தூத்துக்குடி) திருபுவனம் (சிவகங்கை) சிவகாசி (விருதுநகர்) மதுரை (மதுரை) தலா 4 சென்டி மீட்டர் மழையும், சூரன்குடி (தூத்துக்குடி) வாலிநோக்கம் (ராமநாதபுரம்)  புளிபாட்டி (மதுரை) தலா 3 சென்டிமீட்டர் மழையும், போடிநாயக்கனூர் (தேனி) கிராண்ட் அணை (தஞ்சாவூர்) சிட்டம்பட்டி (மதுரை) தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நவம்பர் 20 முதல் நவம்பர் 23 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நவம்பர் 20 முதல் 24 வரை மத்திய அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்  55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . 

நவம்பர் 23 தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . நவம்பர் 24 தென் மேற்கு வங்க கடல் பகுதியில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 25 தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது..