சென்னையில் இன்று அதிகாலை முதலே பெய்துவரும் தொடர் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ராமநாதபுரம் தூத்துக்குடி இடையே  இன்று கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பாம்பனுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் புரவி புயல் மையம் கொண்டுள்ளது. 

அது நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் பலத்த காற்று வீசி வருகிறது, புரவி புயல் எதிரொலியாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புரவி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

இதனால் சென்னையில் கிண்டி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதானல் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதேபோல் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை  மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் இருப்பதால் மிக கனமழை தொடர் வாய்ப்புள்ளது என ணென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.