சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தடுத்தது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் அதிமுகவினர் கரைகளை உடைத்து சேதப்படுத்தி சட்டவிரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட சேலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார சென்ற மு.க.ஸ்டாலினை தடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், அது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், அதில் தமிழக அரசு தலையிட்டது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் துறை இன்று பிற்பகல் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.