ஆரம்ப காலம் முதலே அப்பாவின் வழியில் ஸ்டாலினும் நாத்திக அரசியல்வாதியாகவே பயணத்தை தொடங்கினார். ஆனாலும், பின்னாளில் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சிகளை துவங்கிய பின் ஸ்டாலினின் போக்கில் மாற்றம் தொடங்கியது. துர்கா மிக ஆழமான இறைபக்தி உடையவர். தமிழகத்தில் அவர் வழிபடாத பிரசித்தி பெற்ற ஆலயங்களே இல்லை. மனைவி சொல்படி கடந்த பொது தேர்தலின்போது தென் தமிழகத்தில் பல ஆலயங்களுக்கு செல்லத் தொடங்கினார். 

நாத்திகத்துக்கும், ஆத்திகத்துக்கும் இடையில் தள்ளாடிய ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமான கலைஞர் டி.வியில் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஆயுத பூஜை போன்ற இந்து பண்டிகைகளன்று ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளை ‘விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி’ என்று வாய்கூசாமல் நாத்திகம் பேசுவார்கள். இந்து திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் அதை ஓதும் புரோஹிதருக்கே தெரியாது என்று இஸ்லாமிய திருமண மேடையில் நின்று சூளுரைத்த ஸ்டாலின் மெல்ல தன்னை நாத்திகத்தில் இருந்து மாற்றிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று யாகம் நடத்தினார். யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார். ஆனாலும், அப்போது புரோஹிதர்கள் வைத்த திருநீரை உடனே அழித்தார் ஸ்டாலின். அடுத்து ’ஒன்றே குலம். ஒருவனே தேவன் என அண்ணா கூறியுள்ளார். நாங்கள் ஆண்டவனுக்கு எதிராக நின்றவர்கள் இல்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. அப்படி பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை.

கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை’’ மெல்ல ஜகா வாங்கினார். இப்போது ஆந்திராவில் மொத்தமாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டார் ஸ்டாலின். ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக குங்குமம் வைத்து அழிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினை பக்கத்தில் இருந்து பார்த்த கே.சி.ஆரும், ஜெகன் மோகன் ரெட்டியும் அதிர்ந்து விட்டனர். காரணம் எப்போதுமே தன்னை நாத்திகராகக் காட்டிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் இப்போது மொத்தமாக மாறிவிட்டார்.

 

ஸ்டாலினை இதுவரை வெகுநேரம் குங்குமம் வைத்து யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவரது குடும்பத்தினர் வேண்டுமானால் இந்த நிலையில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.  இந்த விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு ஜெகன்மோகன் ரெட்டி  பெருமாள் சிலையை வழங்கினார்.