திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியுடன் அசன் முகமது ஜின்னா மிகவும் நெருக்கமாகி வருகிறார்.

ஒரு காலத்தில் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் அசன் முகமது ஜின்னா. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் இவர். சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். ஆனாலும் கூட ஸ்டாலினுடனான அவரது நெருக்கம் மட்டும் குறையவே இல்லை. இருந்தாலும் திடீரென ஸ்டாலின் அணியில் இருந்து அசன் முகமது கழட்டிவிடப்பட்டார்.

இது தொடர்பான பஞ்சாயத்து திமுக தலைவர் கலைஞர் வரை சென்றது. ஆனாலும் ஸ்டாலின் இவரை கண்டுகொள்ளவில்லை. பிறகு அரசியல் நிலவரங்கள் மாற மீண்டும் ஸ்டாலினுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹசன் நெருக்கமானார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் உதயநிதி இளைஞர் அணி பொறுப்புக்கு வந்த பிறகு சென்னையில் அவருக்கு எல்லாமமுமாக அசன் முகமது மாறியுள்ளார். அதிலும் கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அசன் முகமது உடன் தான் ஆஜராகிறார் உதயநிதி.

அன்பகத்திலும் கூட அசன் முகமது ராஜ்ஜியம் தான் என்று சொல்கிறார்கள். தற்போது திமுக இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ள ஹசன் முகமது நிர்வாகிகள் நியமனம், மாற்றத்திலும் உதயநிதியின் கருத்தை அறிந்து செயல்படுவதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் ஹசன் முகமது உதயநிதிக்கு என்ன தான் நெருக்கமாக இருந்தாலும் திடிரென இளைஞர் அணியின் நிர்வாகப் பணிகளில் தலையிடுவதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அவருக்கு நிழலாக இருந்ததன் மூலம் சென்னை மாநகராட்சியின் அனைத்து நெழிவு சுளிவுகளையும் அசன் முகமது அறிந்து வைத்திருந்தார். அந்த அனுபவம் உதயநிதிக்கு உதவும் என்பதால் தான் ஸ்டாலின் கூட அவரை உதயநிதியுடன் இருக்க அனுமதித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதுநாள் வரை திமுக இளைஞர் அணி என்றால் உதயநிதி, அன்பில் பொய்யாமொழி என்று இருந்தது இப்போது ஹசன் முகமது என்று பேசும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளதாம்.