தமிழக காவல் துறையினருக்கு வார விடுமுறை வழங்க சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளது காவலர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

தமிழக காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது. இதனால், பணியிலும், குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். இதனால், மன அழுத்தம், உடல் நலக்குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கும் ஆளாகி வந்தனர். இதன் காரணமாக, காவல் துறையில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020 ஜனவரி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை காவல் துறையில் 43 பேர் தற்கொலை செய்தும், 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 90 பேர் உடல் நலக் குறைவாலும், 46 பேர் மார டைப்பாலும், 56 பேர் சாலை விபத்துகளாலும், 7 பேர் புற்று நோயாலும் இறந்துள்ளனர். 

விடுமுறை இல்லாமல் காவலர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். மன அழுத்தத்தாலும் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பிற காவலர்களைவிட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகம்.

இவற்றை கருத்தில் கொண்டு, காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப் பப்பட்டு வருகிறது. ஆனால், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி, காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். ‘‘காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சுழற்சி முறை யில் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்க வேண் டும்’’ என்று அதில் அவர் தெரி வித்துள்ளார்.

இது காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய காவலர்களுக்கும் வார விடுமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.