ஜெயலலிதாவின் நிழலாக தன்னை யாரேனும் குறிப்பிட்டால், அவர்களை திருத்தி ‘அது நானில்லை, புலவர் சங்கரலிங்கத்தோட மகன் பூங்குன்றன் தான் அக்காவோட நிழல்’ என்பார் சசிகலா. அது கடுப்பின் வெளிப்பாடா அல்லது காரணம் பொருந்திய உள் உண்மையா என்பது அவருக்குதான் தெரியும். 

சசி சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான். ஜெயலலிதாவின் பர்ஷனல் செகரெட்டரியாக, நிர்வாக பொழுதுகளில் அவரது நிழலாக நின்று பணியாற்றியவர்தான் இந்த பூங்குன்றன். ஜெ., கட்சியையும், ஆட்சியையும் அரசாண்ட  காலத்தில் இவரிடமிருந்து போன் வந்தாலே ஏதோ ஜெயலலிதாவிடமிருந்து வருவது போல் பதறியடித்து எழுந்து நின்று பேசுவார்கள் அமைச்சர்கள் மற்றும் கழகத்தின் வி.ஐ.பி. நிர்வாகிகள். ஜெயலலிதா வாழ்ந்த போது, அவரது நிழலாகவும், மூடு மந்திரமகாக இருந்த பூங்குன்றன், அவர் மறைவுக்குப் பின் இப்போது வெகு ஜனரஞ்சக மனிதராக மாறிவிட்டார். ஃபேஸ்புக்கில் ஆக்டீவ்வாக இயங்கும் பூங்குன்றன் இன்று அஜித்குமாரை தாறுமாறாக புகழ்ந்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

 

அதில்...

மே தினத்தில் பிறந்த அமர்க்கள மே!
மனதில் பட்டதை பேசும் விவேக மே!
உழைப்பால் உயர்ந்த சிட்டிசனே!
பிறருக்கு உதவுவதில் ராஜாவே!
தன்னம்பிக்கையின் முகவரியே!
ரசிகர்களின் விசுவாசமே!
தல, நீர் வாழ்க பல்லாண்டு! - என வாழ்த்திக் கொட்டியிருக்கிறார். 

ஜெயலலிதாவின் நிழலாய் பார்க்கப்பட்ட பூங்குன்றனிடம் இருந்து வந்திருக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை...ஏதோ ஜெயலலிதாவே வாழ்த்தியது போல் கொண்டாடியுள்ளனர் தல ரசிகர்கள். அதிலும் நேற்று நள்ளிரவில் 12 மணியளவில் இந்த வாழ்த்தை போஸ்ட் செய்து, புளங்காகிதம் அடைந்திருக்கிறார் பூங்குன்றன்.ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாகவே அஜித் இருந்தார், அஜித்துக்கும் ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமை பிடிக்கும் என்று அடிக்கடி பரப்பப்படும் தகவலை பூங்குன்றனின் இந்த அதி பிரத்யேக தலபுராணம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அந்த பதிவுக்கு கீழே கருத்து தெரிவித்திருக்கும் நபர்கள் ஜெயலலிதாவுடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை அப்லோடு செய்து அசத்தியுள்ளனர். ஹும்....தல போல வருமா!