இந்தியாவில் நடைபெற்று வரும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை இந்த உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
சஞ்சீவி மலையை ஹனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக உள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இலங்கை பயணம்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி திண்டாடி வரும் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு முன் வந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலையை அறிய 4 நாட்கள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். இலங்கை மலையக வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் கட்சியான 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' ஏற்பாடு செய்த தொழிலாளர் தின நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “ இந்தியாவில் நடைபெற்று வரும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை இந்த உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

நெருக்கடி நீடிக்காது
உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்திருக்கிறது. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இந்தியர்கள் ஒருவரைக் கூட விடாமல் பிரதமர் மோடி பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டெடுத்தார். இலங்கை எங்களின் அண்டை நாடு ஆகும். இங்கு வாழும் மக்கள் எல்லாம் எங்கள் சொந்தங்கள் ஆவர். அதனால்தான் நாங்கள் இலங்கைக்கு உதவிக்கரத்தை நீட்டுகிறோம். மலையக மக்களுக்கு இந்தியாவின் உதவி இனியும் தொடரும். இங்குள்ள மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதார நெருக்கடி நீண்ட காலம் நீடிக்காது. இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி தயார்
இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியாவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. சஞ்சீவி மலையை ஹனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் " என்று அண்ணாமலை தெரிவித்தார். இலங்கையில் தன்னுடைய 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு அண்ணாமலை நாடு திரும்பிய பிறகு இலங்கை தமிழர்களின் நிலை குறித்து பாஜக தலைமைக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் அண்ணாமலை.
