மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் கடிதத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை ‘சுவிட்ச் ஆஃப்’ (பேட்டரிகளை எடுக்காமல் - செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 7 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள். இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்காக- பாதுகாப்பு அறைக்கு அருகில்- உள்வட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்பு. அதற்கு அடுத்து இரண்டாவது அடுக்காக- மாநில ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் படையைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது அடுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கும் வரை அந்த பாதுகாப்பு அறைக்குள் யாரும் உள்ளே நுழைவதையும், அங்கிருந்து எதுவும் வெளியே போவதையும் தடுப்பதே இந்த மூன்று அடுக்குப் பாதுகாப்பின் மிக முக்கிய நோக்கம்.

