தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினையழித்திடுவோம் என பாரதியார் ஏன் பாடினார் என்பதற்கு விளக்கமளித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினையழித்திடுவோம். இது பாரதியின் வரிகள் என்று படித்த மாத்திரத்திலயே அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், இந்த வரிகள் எழுத காரணமாக இருந்தவர்தான் "நீலகண்ட பிரம்மச்சாரி". உலகிற்கே சோறு போடும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சுதந்திர போரில் சிறைசென்று விடுதலையாகி வெளியே வந்தபின், உண்ண உணவின்றி மதராஸ் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்.

அம்மா.. பசிக்கிறதே என்ன செய்வேன் நான்? பகலெல்லாம் பாரதத் தாயின் விடுதலை பிரச்சாரம். இரவிலே கரியை பூசி அடையாளத்தை மறைத்துக் கொண்டு "அம்மா.. தாயே.. ராப் பிச்சைம்மா" என்று வயிற்று பிரச்சாரம். பகல் பொழுதுகளில் நெஞ்சில் சுதந்திர கனல் கனக்கிறது. இரவில் வயிற்று பசிக் கனல் கனக்கிறது. இரவில் இவர் பிச்சை எடுக்கும் போது அடையாளம் கண்டு கொண்ட ஒருவன் இவரை ஏளனமாக கேட்டான். "இதற்கு நீ சிறையிலேயே இருந்திருக்கலாமே? வேளாவேளைக்கு சரியாக சாப்பாடு போடுவார்கள் அல்ல என்றான் நக்கலாக. 

சுதந்திரத்திற்காக போராடிய அனைவரின் வாழ்விலும் இதுபோன்ற ஏளனம் பேச்சுக்களை கேட்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அடேய்.. அற்பப்பதரே.. அந்நியன் கையால் உணவுண்டு வாழ்வதைவிட, "என் தேசத்து அன்னபூரணிகளின்" கையால் பிச்சை பெற்று வாழ்வது எனக்கு பெருமை. அவர்கள் ஒவ்வொருவரும் பாரதமாதாவே தான் என்று பதிலளித்தார். ஒருநாள் இதே நிலையில் பாரதியாரை இரவு வேளையில் சந்திக்கிறார்.

பாரதியார், சிறை அனுபவங்களை எல்லாம் கேட்டுவிட்டு, நீ சாப்பிட்டா யா என்று கேட்டார். இல்லை,"பாரதி ஒரு நாலணா இருந்தா கொடு, சாப்பிட்டு நாளுநாள் ஆச்சு"என்று  அவர் கெஞ்சலாக கேட்க அந்த வார்த்தைகள் பாரதியாரின் இதயத்தை இடியாக தாக்கியது. நீலகண்டரை சாப்பிட வைத்துவிட்டு, ’’என்ன சமூகமடா இது? தங்கள் விடுதலைக்காக அல்லும் பகலும் பாடுபடுகின்ற தேச பக்தர்களை பட்டினிப்போட்டு, பசியால் வாடவிடும் சமூகம். சொந்த தேசத்திலேயே பராரிகளாய் அலைய விடும் சமூகம்’’என்று பாரதியார் அறச்சீற்றம் கொண்டார்.

 

அப்பொழுது சிம்மமாய் கர்ஜித்த வரிகள்தான், "தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினையழித்திடுவோம்" என்ற வரிகள். பசியோடு பட்டினியோடு இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய என்னற்ற தியாக வீரர்களில் ஒருவர்தான் "நீலகண்ட பிரம்மச்சாரி" இன்று
அவரின் பிறந்ததினம் அவரின் புகழை போற்றிடுவோம்’ என அவர் பதிவிட்டுள்ளார்.