தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் ஏற்பட்டு வருகின்றன என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்ததை ஏற்க முடியாது. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா என்பதை மட்டும் தான் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அதனை விடுத்து புதிய சட்டம் இயற்றுவதற்கு நீதிமன்றத்துக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. அதிமுகவையும், அமமுக.வையும் இணைப்பதற்கு பாஜக முயற்சி செய்வதாக கூறப்படும் கருத்து தவறானது. 

பாஜக அதுபோன்று எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருவிதமான பதற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறார். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமாவளவன் நடந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இதனால் திருமாவளவனுக்கு அச்சம் ஏற்பட்டதால், அந்த பழியை பாஜக மீது சுமத்தி வருகிறார். 

பாஜகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. வேண்டுமென்றே பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.