‘காட்மென்’ வெப் சீரியல் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் உள்ளது. இதை கருத்துரிமை என்று பேசுபவர்களை சமூக விரோதிகள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
ஹெச். ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ளது. கடந்த மோடி ஆட்சியில் செய்த சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து கையேடு தயாரிக்க உள்ளோம். இத்துடன் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தையும் இணைத்து நாடு முழுவதும் 10 கோடிப் பேருக்கு வழங்க உள்ளோம். தமிழகத்தில் 25 லட்சம் பேருக்குக் கொடுப்போம்.


கடந்த ஓராண்டில் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்தது, காஷ்மீர், லடாக் பகுதிகளை முழுமையாக இந்தியாவுடன் இணைத்தது, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது, முஸ்லீம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையை ஒழித்தது போன்றவற்றைச் சொல்லலாம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை முழு மானியத்துடன் மத்திய அரசு வழங்கியுள்ளது. 
 நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து விடுவார்கள் என்று  ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். ஆனால், மோடி அந்தத் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு 100 ரூபாய்தான் கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்ஓது அதை 182 ரூபாயாக பிரதமர் உயர்த்தியுள்ளார். தற்போது மேலும் ரூ.40 ஆயிரம் கோடி அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இரண்டே மாதங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ரேபிட் கிட்ஸ் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. 
உலக அளவில் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.5 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 2.6 சதவீதமாக உள்ளது. இதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 25 சதவீதம்தான். இது இந்தியாவில் 48. 6 சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடி தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால்தான் இது சாத்தியமாகியுள்ளது. மின்சார திருத்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது.

 

காட்மென்’ வெப் சீரியல் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் உள்ளது. இதை கருத்துரிமை என்று பேசுபவர்களை சமூக விரோதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணியையும், திமுகவின் தமிழன் பிரசன்னாவையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஹெச். ராஜா  தெரிவித்தார்.