கொரோனாவை வெல்ல மருத்துவம் அளவிற்கு இறையருளும் முக்கியம் என்று அமெரிக்க அதிபரே சொல்லியிருக்கிறார். எனவே ஜீயர் சுவாமிகள் கூறியதில் என்ன தவறு என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, ‘108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும்.” என்று தெரிவித்தார். ஜீயரின் இந்தப் பேட்டியை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்தும் கிண்டல் செய்தனர். 
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ் இதுதொடர்பாக ட்விட்டரில் நிலைத்தகவலை பதிவு செய்திருந்தார். அதில், “ஜீயர் என்றால் பொய் பரப்பலாமா? தணிகாசலம் ஒரு மருந்து சொன்னால் அது தவறென்று கைது செய்தீர்கள். இந்த ஜீயர் மந்திரம் சொன்னால் கொரோனா நெருங்காதென்கிறார். இது தவறான பிரச்சாரம் இல்லையா? இவர் இதை திரும்ப பெறவேண்டும்.இல்லையேல் அரசு இவரைக் கைது செய்ய வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில் ஜீயரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனாவை வெல்ல மருத்துவம் அளவிற்கு இறையருளும் முக்கியம். எனவே அமெரிக்காவில் உள்ள சர்ச் மசூதிகளை அமெரிக்க மாநில ஆளுநர்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் கூறினார். எனவே ஜீயர் சுவாமிகள் கூறியதில் என்ன தவறு. இந்து விரோத கனகராஜ், நக்கீரன் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.