மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்காமல் போயிருந்தால் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் 8.2 லட்சத்தை தாண்டியிருக்கும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக சில அமைப்புகள் மற்றும் சில எதிர்கட்சிகள் இந்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு தேவையில்லாதது என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி பரப்ப துவங்கியுள்ளனர். மேலும் அர்பன் நக்சல் கும்பல் இப்பொழுதே நோட்டீஸ் போட்டு கிராமங்களில் இறங்கியுள்ளதாக செய்திகள் வருகிறது. நான் கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக எச்சரித்து வந்துள்ள தீய சக்திகள் கைகோர்க்கும்.


ஆனால் உண்மை நிலை என்ன? மத்திய அரசு இந்த ஊரடங்கு அறிவிக்காமல் போயிருந்தால் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் 8.2 லட்சத்தை தாண்டியிருக்கும். 50000 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பர். இந்தியாவின் தற்போதைய நிலையை நம்மில் 1/4 பங்கு மக்கள் தொகையுள்ள அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நமக்கு மோடியின் துணிச்சல்மிக்க முடிவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்றளவும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லது தப்லீகி ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தான் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். சமுதாயத் தொற்று என்கிற மூன்றாம் நிலையை நாம் தொடவில்லை.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிச்சயமாக முழு உதவிகளும் செய்யும். ஆனால், மக்களை நோயிலிருந்தும் சாவிலிருந்தும் காப்பாற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஏற்று வீட்டிலிருப்போம். வெளியே வரும்போது மாஸ்க் அணிந்து வருவோம். சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம். அர்பன் நக்ஸல், ஜிஹாதிஸ்ட் மற்றும் ஊடக பயங்கரவாதிகள் வலையில் விழாமல் தேசம் காப்போம்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.