உயர்நீதிமன்றத்தையும் போலீசையும் கேவலமாக பேசிய ஹெச்.ராஜாவை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கு சென்னை கோட்டையில் இருந்து சென்ற திடீர் உத்தரவால் கைது நடவடிக்கை தாமதமாகியுள்ளது. ஹெச்.ராஜாவுக்கு சனிக்கிழமை பிற்பகலில் போலீசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடும் வகையில் பேசியிருந்தார். ஆனால் அவர் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிலும் ஹெச்.ராஜா மீது உடனடியாக ஜாமீன் கிடைக்காத கடுமையான பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஹெச்.ராஜா மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் என்பதால், உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. 

டி.ஜி.பி அலுவலகம் வரை தகவல் தெரிவிக்கப்பட்டு சென்னையில் இருந்து அனுமதி கிடைத்த பிறகு தான் திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடடினயாக ஹெச்.ராஜாவை கைது செய்யும் நடவடிக்கையை துவங்குமாறும் போலீசாருக்கு உத்தரவு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்தே ஹெச்.ராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தகவல்களை அறிந்த ஹெச்.ராஜா கைது செய்யப்படாமல் இருக்க மன்னார்குடியில் இருந்து எங்கு செல்கிறோம் என்பதை யாருக்கும் தெரிவிக்காமல் தலைமறைவாகிவிட்டார். போலீசார் ஹெச்.ராஜா நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் ஹெச்.ராஜா தேவகோட்டை அருகே உள்ள பண்ணை வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து லோக்கல் போலீசார் அங்கு சென்றனர். ஹெச்.ராஜாவை லோக்கல் போலீசார் கைது செய்து திருமயம் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனிப்படை போலீசார் திடீரென ராஜாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்புருட்டாக கட் செய்தனர். மேலும் ஹெச்.ராஜாவை தேடும் பணியையும் நிறுத்தி வைத்தனர். இதற்கு சென்னை கோட்டையில் இருந்து வந்த உத்தரவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

ஹெச்.ராஜா தனது டெல்லி தொடர்புகள் மூலமாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யமாட்டார்கள் என்கிற உறுதி கிடைத்த உடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ராஜா புறப்பட்டுச் சென்றார். ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டாம் என்று கோட்டையில் இருந்த வந்த உத்தரவு போலீசாருக்கே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கை தான் என்றும், எப்போது வேண்டுமானாலும் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டு ஹெச்.ராஜா கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.