ஹெச்.ராஜாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைமிக கடுமையாக விமர்சித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தையும் இழிவான வார்த்தையால் ராஜா வசைபாடினார். அத்துடன் தமிழக டி.ஜி.பி குறித்தும் ஹெச்.ராஜா அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசினார். 

இதனை தொடர்ந்து ஹெச்.ராஜா மீது திருமயம் காவல் நிலையத்தில் எட்டு பிரிவுகளில் அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்யவில்லை. இது குறித்து கோவை வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஹெச்.ராஜா கோபத்தில் ஏதேதோ பேசியதாக தெரிகிறது என்றார். 

ஹெச்.ராஜா போலீசாரிடம் செய்த வாக்குவாதம் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார். மிகுந்த டென்சனில் இருக்கும் ஹெச்.ராஜாவுக்கு ரத்த கொதிப்பு இருக்கலாம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். எனவே ஹெச்.ராஜாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்று ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஹெச்.ராஜா விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு முன்னதாகவே அவர் ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டினர். அதற்கு ஜெயில் என்று ஒன்று இருந்தால் பெயில் என்று ஒன்று இருக்கத்தான் செய்யும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். போலீஸ் வழக்குப் பதிவு செய்தநிலையில், எஸ்.வி.சேகர் நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று கூறிவிட்டு ராஜேந்திர பாலாஜி புறப்பட்டார்.