நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கடந்த 21-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இயக்குநர்கள் அமீர், சுசீந்திரன், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு எதிராக உள்ளனர். ஆனால் அதேநேரத்தில், தயாரிப்பாளர்கள் தாணு, மன்னன், இயக்குநர்கள் சீனு ராமசாமி, வெற்றி மாறன், ராஜகுமாரன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர்.

அசோக்குமாரின் தற்கொலையை அடுத்து அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார். அன்புச்செழியன் மீது சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை கடந்த ஓரு வாரத்திற்கும் மேலாக போலீசார் தேடிவருகின்றனர். ஆனால், இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அன்புச்செழியனின் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால், அன்புச்செழியனை நெருங்கமுடியவில்லை. அன்புச்செழியனை வலைவீசி போலீசார் தேடிவருகின்றனர்.

அன்புச்செழியனை திரையுலகின் ஒருதரப்பினர் எதிர்க்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றனர்.

இந்நிலையில், அசோக்குமாரின் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு அன்புச்செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொலை மற்றும் தற்கொலை வழக்கில், மரண வாக்குமூலம் மற்றும் இறந்தவரின் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காரணமானவரை கைது செய்ய வேண்டும். எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமாரின் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில், நிழலுலக தாதா அன்புச்செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">பொதுவாக கொலை மற்றும் தற்கொலை வழக்கில் இறந்தவரின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.<br> எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமார் கடிதம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.நிழல் உலக தாதா அன்புச் செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.</p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/936427112063418368?ref_src=twsrc%5Etfw">December 1, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>