திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக ரங்கராஜன் நரசிம்மன்(49) என்பவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்தார். கோவிலில் இருக்கும் மூலவர் ரெங்கநாதர் மற்றும் உற்சவர் நம்பெருமாள் ஆகிய சிலைகள் போலியானவை என்றும் அவை மாற்றப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறிவந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து நிலையில் அது நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவிலைச் சுற்றி இருக்கும் தென்னை மரங்கள் பட்டுபோனதாக கூறப்பட்டு நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்டன. இது அதிகாரிகள் சிலரின் தனிப்பட்ட பலன்களுக்காக நடைபெறுவதாக ரங்கராஜன் மீண்டும் பதிவிட்டிருந்தார். இதனால் கோவில் நிர்வாகம் சார்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரங்கராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மேற்கொண்டு இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறி திருச்சி மாஜிஸ்திரேட்டு அவரை விடுவித்தார்.

இதையும் படிங்க: தொலைந்தது ஸ்ரீரங்கம் கோவிலின் அடையாளம்..! அறங்காவலர்கள் அடாவடி..! அர்ச்சகர் ரங்கராஜன் கொந்தளிப்பு..!

 

இந்தநிலையில் ரங்கராஜன் உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர்," ஸ்ரீ ரங்கம் கோவிலில் நடைபெறும் ஊழல்கள் குறித்து குரல் கொடுத்துவரும் ரங்கராஜன் மீது ஊழல் துறையின் அதிகாரி அளித்த பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாளை நீதிபதி மகாதேவன் அவர்கள் முன்வரும் வழக்கில் அவர் ஆஜராவதை தடுக்கும் முயற்சியே இது." என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: உலகப்புகழ் ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை திருட்டு..? முக்கிய நபர் அதிரடி கைது...!