திருச்சியில் மாவட்டத்தில் இருக்கிறது ஸ்ரீ ரங்கம். இங்கிருக்கும் ரங்கநாத பெருமாள் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்த புகார் எழுந்து வந்தது. ஆகம விதிகளை மீறி கோவில் நிர்வாகம் செயல்படுவதாக பக்தர்கள் சிலர் கூறி வந்தனர்.

இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்(49) என்பவர் Shri Rama Bhavanam என்னும் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றசாட்டுகளை கூறிவந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருக்கும் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் ஆகிய சிலைகள் போலியானது என்றும் அவை மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இந்தநிலையில் ரங்கராஜன் கோவில் நிர்வாகத்தின் மீது மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் பதி  விட்டிருந்தார். கோவிலில் இருக்கும் உத்தரவீதியில் இருந்த 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தங்கள் சொந்த ஆதாயத்திற்காக அதிகாரிகள் சிலர் பராமரிக்காமல் விட்டு பட்டுப்போக வைத்து தற்போது வெட்டியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கோவில் இணை ஆணையர் ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்தார். கோவில் நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்புவதாகவும் மத உணர்வை தூண்டி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரங்கராஜனை இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் திருச்சி மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு, போலீசார் தொடர்ந்த வழக்கை நிராகரித்தார். மேலும் இது சம்பந்தமான வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சமூக ஊடகங்களில் கோவில் தொடர்பாக ரங்கராஜன் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் காவல்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:  தொலைந்தது ஸ்ரீரங்கம் கோவிலின் அடையாளம்..! அறங்காவலர்கள் அடாவடி..! அர்ச்சகர் ரங்கராஜன் கொந்தளிப்பு..!