மு.க.ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் பொதுமக்களிடம் மதவாதத்தை தூண்டிவிடுகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்தில், அவர் வீணை வாசிப்பதுபோன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பகவத் கீதை வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், பெரும் சர்ச்சை உருவானது.

இதையடுத்து, இன்று காலை அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், மணிமண்டபத்தில் உள்ள சிலையின் அருகே குர்-ஆன் மற்றும் பைபிள் ஆகியவற்றை வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி, காவல் நிலையத்தில், சலீம் மீது புகார் செய்தது.

அதில், அனுமதியின்றி, அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குர்-ஆன், பைபிள் வைக்கப்பட்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து சலீம், அங்கிருந்த குர்-ஆன், பைபிள் ஆகியவற்றை எடுத்து சென்றார். 

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியளாளர்களிடம் கூறியதாவது:-

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தில், அவரது சிலை அருகே பைபிள், குர்-ஆன் ஆகியவை வைத்ததில், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அவர் செய்தது, நன்றாகவே உள்ளது. ஆனால் சலீம், யாரிடமும் முறையாக அனுமதி கேட்காமல், அங்கு வைத்தது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

அதேபோல், மக்கள் இடையே மத பிரச்சனையை மு.க.ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மக்களிடம் மதவாதத்தை தூண்டி, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க செய்வது அவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அவர்களை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.