பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது.

லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதிவெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவை அடுத்து, பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அவரின் இந்த பதிவால், கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. சென்னையில் நடந்து சென்ற பிராமணர்களின் பூணூல்
அறுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தன. 

இந்த சம்பவங்களுக்கு ஹெச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துதான், இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததற்காக ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யவும் அதில் கோரியிருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஜெகதீசன் வழக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததற்காக ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மனு அளித்திருந்தார். 

தனி நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அவகாசம் வழங்காமலேயே நீதிமன்றத்தை ஜெகதீசன் அணுகியுள்ளார். எனவே மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.