கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.கவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றார். முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு வரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க எடியூரப்பா முயன்றதாக புகார் எழுந்தது.
   
ஆனால் ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக செயல்பட உள்ளதாக கூறிவிட்டு வேறு வேலைகளில் எடியூரப்பா தீவிரம் காட்டத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சிக்கு 22 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் சுமார் 14 பேர் மட்டுமே காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
   
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மேலும் 8 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த எட்டு அமைச்சர் பதவிகளுக்கு ஏராளமானவர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதனால் அந்த பதவிகளை நிரப்ப முடியாத சூழலில் காங்கிரஸ் தலைமை தவித்து வருகிறது. கடந்த மாதம் டெல்லி சென்ற குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து எட்டு அமைச்சர்களுக்கான பெயர் பட்டியலை வழங்குமாறு கூறினார். ஆனால் ஒருவரை விடுத்து மற்றொருவர் பெயரை கொடுத்தால் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்பதால் ராகுல் தயக்கம் காட்டி வருகிறார்.
   
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.கவினர் கணிசமான எண்ணிக்கையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பணம் தருவதாகவும் வேறு சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அண்மைக்காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஞாயிறன்று டெல்லியில் பா.ஜ.க தேசியக் குழு கூடியது. அதில் கூட பங்கேற்காமல் பா.ஜ.கவின் கர்நாடக மாநில தலைவரான எடியூரப்பாக பெங்களுரில் தங்கியிருந்தார்.


   
இதனால் அங்கு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தீவிரம் அடைந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பெங்களூர் அருகே ரிசார்ட் ஒன்று தயாராகிவிட்டதாகவும். விரைவில் கணிசமான எண்ணிக்கையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அங்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை இன்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உறுதிப்படுத்தியுள்ளார். சில எம்.எல்.ஏக்களுக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், ரிசார்ட் பாலிடிக்ஸ் மீண்டும் அரங்கேறே உள்ளதாகவும் வெளிப்படையாகவே குமாரசாமி கூறியுள்ளார்.
   
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா முயல்வதாகவும் அவர்கள் என்ன செய்கிறார்களோ? அதையே தானும் செய் தயாராக இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.