முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென சந்தித்துள்ளார். குட்கா விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் விசாரித்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ததற்காக மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து அதைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் சரவணனிடம் கடந்த 7-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா ஆகியோர், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். அதில், குட்கா வியாபாரம் பெரிய அளவில் நடந்த போது, ரமணாதான் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார். அவரே சில பகுதிகளுக்கு நேரடியாக குட்கா வியாபாரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

 

அதேபோல, விஜயபாஸ்கரிடமும் அவரது நேர்முக உதவியாளர் சரவணன் பணம் வாங்கியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. 9 மணி நேரம் நடந்த விசாரணை இரவு 8 மணிக்கு முடிந்தது. அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் 2-வது நாளாக நேற்றும் சிபிஐ அதிகாரிகள் முன்பு அதிகாரிகள் கேட்ட ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளித்தார். 

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் குட்கா விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.