சிபிஐ நெருக்கடி இறுகுவதால், அமைச்சர் விஜயபாஸ்கரிடம், பதவியை ராஜினாமா செய்யும்படி, முதல்வர்  எடப்பாடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் வீட்டில், வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, டிடிவி.தினகரனுக்காக பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. அந்த நேரத்திலேயே அவரை, ராஜினாமா செய்யும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

பின்னர், அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை, கடைகளில் விற்பனை செய்ய, லஞ்சம் வாங்கியதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மீண்டும், அவரை ராஜினாமா செய்யும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

குட்கா ஊழல் வழக்கை, சிபிஐ, விசாரிக்க கோரி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. மேலும் திமுக சார்பில், வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும், இந்த வழக்கை சிபிஐ, விசாரணை உத்தரவிட்டது. அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம், சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களிடமும், விசாரணை நடந்து வருகிறது. 

சிபிஐ.விசாரணை தீவிரமாகி உள்ளதால், அடுத்து கைது நடவடிக்கை எடுக்கலாம் என உளவுத் துறை போலீசார், அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கரை வரவழைத்தார். அப்போது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

விசாரணை முடிந்த பின், மீண்டும் பதவி வழங்கப்படும். கட்சியில் முக்கியத்துவம் தரப்படும் என, முதல்வர் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.