குஜராத்தில் ராஜ்ய சபா எம்.பி. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகிறார்கள். 
குஜராத் உள்பட 7 மாநிலங்களில் உள்ள 17 எம்.பி.களை தேர்வு ராஜ்ய சபா தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெற உள்ளது. இதில் குஜராத்தில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 35 எம்.எல்.ஏ.க்கள் வாக்குகள் தேவை. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கனவே 5 விலகியதால் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. எனவே இரு எம்.பி. பதவிகளை வெல்ல வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை இருந்தது.


இந்நிலையில் ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்‌ஷய் படேல் மற்றும் ஜிது சவுத்ரி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு இரு எம்.பி.க்கள் கிடைப்பதில் மேலும் சிக்கலானது. இதற்கிடையே நேற்று பிரிஜேஷ் மெர்ஜா என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவருடைய ராஜினாமாவை குஜராத் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். 
தற்போது மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், கட்சியின் பலம் 63 ஆகக் குறைந்துள்ளது. எனவே இரண்டாவது எம்.பி.யைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி பெறும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அக்கட்சிக்கு மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக இரண்டாவது எம்.பியைத் தேர்வு செய்ய 2 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.
ராஜ்ய சபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிடிக்கு நெருக்கமாக வந்துகொண்டிருக்கும் பாஜக, எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வைத்து அரசியல் விளையாட்டுகளை ஆடிவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேலை தோல்வியடைய செய்ய பல உத்திகளை பாஜக கையாண்டது. ஆனால், கடைசியில் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது நினைவில் இருக்கலாம்.