BJP will win in Gujarat Pre poll survey
குஜராத் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், பா.ஜனதா வெற்றி பெறும் என்றாலும், காங்கிரசின் பலம் கூடியிருப்பதால், ஆளும் கட்சியின் ஓட்டு விகிதம் சரிய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
2-வது கருத்து கணிப்பு
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்காக, ‘ஏ.பி.பி. நியூஸ்’ என்ற டி.வி. சேனல், இரு தனியார் அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு (கருத்து கணிப்பு) நடத்தியது.
கடந்த 3 மாதங்களில் நடந்த இரண்டாவது கருத்து கணிப்பு இதுவாகும்.
வெற்றி வாய்ப்பு
இதில், ஆளும் பா.ஜனதா கட்சி, 113 முதல் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. காங்கிரசுக்கு 58 முதல் 64 இடங்கள் வரை கிடைக்கலாம்.
அதே நேரத்தில், ஓட்டு விகிதத்தை பொருத்தவரை, பெரிய அளவில் வித்தியாசம் இன்றி,பா.ஜனதாவுக்கு 46 சதவீதமும், காங்கிரசுக்கு 41 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
பா.ஜனதாவுக்கு சரிவு
குஜராத் தேர்தல் குறித்த முதல் கட்ட கருத்து கணிப்பு கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்றது.
2 மாதங்களுக்குப் பின் தற்போது நடந்துள்ள இந்த கருத்துக் கணிப்பில், பா.ஜனதாவின் ஓட்டுகள் சரிவு அடைந்துள்ள நிலையில், காங்கிரசின் பலம் வெகுவாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
முதல் கருத்து கணிப்பு நடந்தபோது, மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு இருந்தது.
அகமது பட்டேல்
அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்த சங்கர்சிங் வகேலா தலைமையில் 12க்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரசை விட்டு வெளியேறி இருந்தனர்.
இருந்தபோதும், இந்த தேர்தலில் காங்கிரசின் மூத்த தலைவரும் சோனியா காந்தியின் அரசியல் செயலாளருமான அகமது பட்டேல் பகீரத பிரயத்தன முயற்சியின் பேரில் வெற்றி பெற்றார்.
பலம் பெற்ற காங்கிரஸ்
அதன் பிறகு அடுத்த சில மாதங்களில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இரு பிராந்தியங்களில் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை வெகுவாக அதிகரித்து உள்ளது.
சவுராஷ்டிரா - கட்ச், வடக்கு குஜராத் ஆகிய இந்த இரு பிராந்தியங்களில் மட்டும் முறையே 58 மற்றும் 32 தொகுதிகள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இழுபறி நிலை
அதிக தொகுதிகளைக் கொண்ட சவுராஷ்டிரா பிராந்தியத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே இழுபறி நிலை ஏற்படும் அளவுக்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும். இரு தரப்பினருக்கும் தலா 42 சதவீத ஓட்டுகள் இந்தப் பிராந்தியத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
போர்க்கொடி
சவுராஷ்டிரா பகுதி, கடந்த 1995-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கி வந்தது. இதுவரை அந்தக் கட்சியை வலுவாக ஆதரித்து வந்த பட்டேல் சமு்கத்தினர், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தற்போது ஆளும் பா.ஜனதாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.
இந்த இட ஒதுக்கீடு போராட்டத்திற்குப் பின், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில், இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பா.ஜனதா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
4 மாவட்டங்களில்
பட்டேல் சமூகத்தினர் ஆதிக்கம் நிறைந்த மோர்பி, ராஜ்கோட், அம்ரேலி மற்றும் ஜாம்நகர் ஆகிய மாவட்டங்களில் வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா தோல்வியை தழுவும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதே போல் வடக்கு குஜராத் பிராந்தியத்திலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டு வங்கி காரணமாக காங்கிரசின் செல்வாக்கு ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
