கேரள அரசின்  கல்வித்துறை தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையைவிட  அரசுப் பள்ளிகளில்  அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

கேரளாவில்  பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து655 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் 71ஆயிரத்து 257 மாணவ, மாணவியரும் (6.3 சதவீதம்), அரசுஉதவி பெறும் பள்ளிகளில் 1லட்சத்து 13ஆயிரத்து 398 (5.3 சதவீதம்) பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 33,052 குறைந்துள்ளது (8 சதவீதம்). நிலச்சரிவு காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. அங்கிருந்து விவரங்கள் கிடைக்கிற போது இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது.

பொதுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 10 ஆயிரத்து 83 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மிகவும் அதிக பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 4978 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் பொதுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை முதன்முறையாகஅதிகரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.