தெலுங்கானா மாநிலத்தின் முழு நேர ஆளுநராகவும் முதல் பெண் ஆளுநராகவும் தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி தெலுங்கானா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே தெலுங்கானா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ் மக்களே, தமிழ் மண்ணே சென்று வருகிறேன். ஆளுநராக ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தும் தெலுங்கானாவில் இருந்தாலும் என் நினைவுகள் தமிழகத்தில் தான் இருக்கும்" என்றார்.

மேலும் மகிழ்ச்சியாக இந்த பொறுப்பினை ஏற்க தமிழக மக்களின் ஆசிர்வாதத்தோடு செல்வதாக கூறிய அவர், தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு பாடுபட போவதாக தெரிவித்தார்.