மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் - அமைச்சர் குற்றச்சாட்டு
மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரையில் 90 சதவீத பணிகள் முடிவுற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில் "126 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
தென் மாவட்ட மக்கள் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டு வருகிறது, நூலகத்தில் 1,20,000 தமிழ் புத்தகங்கள், 2,25,000 ஆங்கில புத்தகங்கள் 6,000 இ-புத்தகங்கள் இடம்பெற உள்ளன. மேலும் 12,000 ஓலைச் சுவடிகளும் நூலகத்தில் வைக்கப்பட உள்ளன. நூலகம் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எப்ரல் 30 ஆம் தேதிக்குள் நூலக கட்டுமான பணிகள் நிறைவு பெற உள்ளது. மே 5 ஆம் தேதிக்கு பின்னர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணிகள் தொடங்கும்.
ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசை ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும். அரசு கொண்டு வரும் திட்டங்களை வேகப்படுதுபவராக ஆளுநர் இருக்க வேண்டும். மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இதனால், உயர்க்கல்வி பாதிக்கப்படுகிறது, ஆளுநர், அரசின் கோப்புகளை பார்க்காமல் இருப்பது, அப்படி கோப்புகளை பார்த்தாலும் ஏதாவது காரணம் சொல்வது. ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.
ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநரை வைத்துக் கொண்டு தமிழக அரசு எப்படி செயல்படும். முதல்வர் வேகமாக செயல்படுவது போல ஆளுநர் மிக வேகமாக செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் நல்ல திட்டங்கள் கொண்டு வர முடியும், ஆளுநர் விவகாரத்தில் ஒன்றிய அரசை குற்றம் சொல்ல முடியாது. ஆளுநர் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதன் பின்னணியில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா என தெரியாது என கூறினார்.