நீட் தேர்வால் தமிழக அரசோடு உச்சத்தை தொட்ட மோதல்...! அவசர, அவசரமாக டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி
நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம், செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு- ஆளுநர் ரவி மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆரம்பித்த மோதல், ஆன்லைன் சூதாட்ட மசோதா, அரசு நிகழ்வுகளில் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை பேசுவது, திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக விமர்சனம் வைப்பது போன்றவற்றால், இருதரப்பினருக்கான மோதலில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில்தான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி வெளியிட்ட உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரை வெளியிட்ட உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவிலிருந்து பின் வாங்கினார் ஆளுநர்.
நீட் தேர்வு- ஆளுநர் கருத்து
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்தியில் ஆளுநர் ரவி பேசியபோது, நீட் தேர்வு மசோதாவில் நானாக இருந்தால் கையெழுத்திட மாட்டேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தமிழக மக்களே நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் நிலையில் ஆளுநர் ரவியின் கருத்து அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரியும் திமுக சார்பாக வருகின்ற 20ஆம் தேதி தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ரவி இன்று காலை டெல்லி செல்ல உள்ளார். டெல்லி செல்லும் ஆளுநர் ரவி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலவரம் தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது. மேலும் நீட் தேர்வு மசோதாவிற்கு எதிராக ஆளுநர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாகவும் விவாதிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பது தொடர்பாக சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்பார் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்