நாட்டை குடும்பமாக பார்க்கும் மோடி..! ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்திய திராவிட மாடல்- ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு
தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஆளுநர் ரவி, தண்ணீர் தொட்டிகளில் மலம் கொட்டுவது, கோவில்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பது, தாக்குதல் மற்றும் பொதுவெளி அவமானப்படுத்துதல், வகுப்பறைகளில் தனிமைப்படுத்துதல் போன்ற கொடுமைகளை நடைபெற்று வருவதாக விமர்சித்துள்ளார்.
அரசியலுக்கு மட்டும் அம்பேத்கர்
அம்பேத்கரும் மோடியும், 20 கனவுகளை விளக்கும் மோடி ஆகிய இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்பை ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் தண்டனை விகிதங்களை சுட்டிக்காட்டினார். அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். அவர் அரசியலமைப்பின் தந்தை மட்டும் அல்ல. சமூக பிரச்சனைகளுக்காக முன் நின்றார் என கூறினார்.
திராவிட மாடலை போல் இல்லை
பிரதமர் மோடி பாரதத்தை ஒரு குடும்பமாக பார்க்கிறார். குடிநீர், கல்வி, சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு போன்ற அடிப்படை தேவைகள் சாதி, மத பேதங்களின்றி பிராந்திய மற்றும் துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்திய திராவிட மாடலை போல இல்லாமல் மக்களை சென்றடைகின்றன என கூறினார். இங்கு நாம் சமூக நீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள், தண்ணீர் தொட்டிகளில் மலம் கொட்டுவது, கோவில்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பது, தாக்குதல் & பொதுவெளி அவமானம், வகுப்பறைகளில் தனிமைப்படுத்துதல் போன்ற கொடுமைகளை அவ்வப்போது சந்தித்து வருகிறோம் என கூறினார்.
93% குற்றவாளிகள் தப்புகின்றனர்.
தலித்துகள் தொடர்பான சட்ட அமலாக்கத்தில், குறிப்பாக தலித் மகளிருக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளில், சுமார் 93% குற்றவாளிகள் தப்புகிறார்கள். சிஏஜி அறிக்கைப்படி, அவர்களின் வீட்டு வசதிக்காக ஒதுக்கிய நிதியில் 30% செலவழிக்கப்படாமலோ வேறு நோக்கத்துக்காகவோ திருப்பி விடப்படுவதாகவும் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்