அண்மைக்காலமாக பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இல்லாமல் பொன்.ராதாகிருஷ்ணன் ஒதுங்கி வருவது அவரது ஆதரவாளர்களை சோகமாக்கியுள்ளது.

தமிழக பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் வருகைக்கு பிறகு தான் ஓரளவிற்கு பாஜகவிற்கு தமிழகத்தில் பெயர் கிடைக்க ஆரம்பித்தது. வேறு எந்த தலைவரும் இல்லாத வகையில் சுமார் 5 ஆண்டுகள் வரை பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தமிழக தலைவராக இருந்தார். அதோடு மட்டும் அல்லாமல் 2014 தேர்தலில் மெகா கூட்டணி அமையவும் இவர் தான் காரணமாக இருந்தார். 

கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தான் பாஜக சார்பில் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்ற ஒரே எம்.பி.யாகவும் இருந்தார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. எந்த சர்ச்சையிலும் சிக்காமல் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இருந்தாலும் தன்னை மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய அமைச்சர் ஆக்குவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார் பொன்னார். ஆனால், அவரை டெல்லி கண்டுகொள்ளவில்லை. இதன் பிறகு ஏதேனும் ஒரு வடகிழக்கு மாநிலத்திற்கு ஆளுநர் ஆகிவிடலாம் என்று காய் நகர்த்தி வந்தார் பொன்னார். ஆனால் அண்மையில் ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றத்தை மத்திய அரசு செய்து முடித்துவிட்டது. 

இதிலும் கூட பொன்னாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் வெகு விரைவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த பட்டியலுக்கான பரிசீலனையில் கூட பொன்னார் பெயர் இல்லை என்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் கட்சி விவகாரங்களில் பொன்னார் தலையிடுவதில்லை என்கிறார்கள். சென்னையில் கமலாலயம் வந்து சென்றாலும் கட்சி விவகாரம் குறித்து பேசுவதில்லை என்று கூறுகிறார்கள். 

மேலும் தனது ஆதரவு நிர்வாகிகள் அழைக்கும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு சமூக நிகழ்வுகள் குறித்து பேசும் பொன்னார், காரசாரமான அரசியல் விவகாரங்களை தவிர்த்துவிடுகிறார். இதற்கு காரணம் போதும் என்கிற எண்ணத்திற்கு பொன்னார் வந்துவிட்டாரா என்கிற சந்தேகம் அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தற்போதைக்கு பொன்னார் சற்று அடக்கி வாசிப்பதாகவும் விரைவில் தமிழக பாஜக தலைவராகவே அவர் வருவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கொளுத்தி போடுகிறார்கள்.