தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. கவர்னர் உரைமீதான விவாதம் இன்று துவங்குகிறது.
தமிழக சட்டசபை கடந்த 23ம் தேதி கூடியது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் துவங்கியது.
அதிமுக அரசு இரண்டாவது முறையாக கடந்த 2016 ஆண்டு மே மாதம் பதவியேற்றது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இடைகால பட்ஜட் அப்போது தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் ஜெயலலிதா , உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

இதையடுத்து, புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு , அதிமுக அரசின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெறும், முதல் சட்ட மன்ற கூட்ட தொடர் இது.
கடந்த 23ம் தேதி கூட்டத்தொடரின் முதல் நாள், கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
முதல்நாள் கவர்னர் உரைக்கு பின், அன்றே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டமும் நிறைவேற்றப்பட்டது. மறுநாள், முதல்வர் ஜெயலலிதா உள்பட சமீபத்தில் காலமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. கவர்னர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடக்க உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் மீண்டும் 30, 31ம் தேதிகளில் விவாதம் நடைபெறும்.
இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி முதல்வர் ஒ.பி.எஸ். விவாதத்தின் மீது பதில் அளித்து பேசுவார். இந்த சட்டசபை கூட்ட தொடரில், ஜல்லிக்கட்டு விவகாரம், மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி, தமிழக வறட்சி, விவசாயிகள் உயிரிழப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் மீது விவாதம் நடைபெறும் என தெரிகிறது.
பொதுவாக ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை சட்டசபை கட்டுப்பாட்டுடன் நடக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின், விவாதங்கள் எந்த அளவுக்கு நடக்கும். சட்டசபை அமைதியான முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறியே
