governor is getting ready to inquiry ministers
தமிழகம் இதுவரை கண்டிருக்கும் கவர்னர்கள் போல் இல்லை இப்போது அந்த சீட்டில் நிறைந்திருக்கும் பன்வாரிலால் புரோகித். ஒரு கவர்னராக தனது கடமையை தொய்வின்றி செய்ய முயல்கிறார். குறிப்பாக மக்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய மிகவும் மெனெக்கெடுகிறார்.
இன்று எல்லா பத்திரிக்கைகளும் சொல்லும் இந்த விஷயத்தைத்தான் நமது அஏஸியாநெட் தமிழ் இணையதளம் அன்றே கணித்து ‘நான் தலையாட்டி பொம்மையில்லை!
களையெடுக்கிற கத்தி’ என்று மாஸ் தலைப்பிட்டு கவர்னரை ‘தி பாஸ்’ என்று தமிழர்களுக்கு அடையாளப்படுத்தியது. நாம் குறிப்பிட்டது போலவே கவர்னரின் ஆய்வு அதிரடிகள் கோயமுத்தூரில் நிகழ்ந்தேறின. அது தமிழகத்தையே ஆட வைத்த தருணங்கள்.
இந்நிலையில் ‘புது காரு கொஞ்சம் உறுமத்தான் செய்யும். பழகப்பழக சாதுவாயிடும்.’ என்று கவர்னரை சில கரைவேஷ்டிகளும், அரசு அதிகாரிகளும் கிண்டலடித்தார்கள்.
ஆனால் ‘சாணை பிடிக்கிறதுக்கு நான் கத்தி இல்லடா! கண்ணாடி’ என்று நறுக்கென நிரூபித்து அடுத்தடுத்த அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் மனிதர்.
அந்த வகையில் தமிழ் கற்க ஆரம்பித்திருக்கிறார். கவர்னர்.
ஏன் இந்த முயற்சி? என்றால் ராஜ்பவனிலிருக்கும் சில நேர்மையான அதிகாரிகள் சொல்லும் பதில்...”நாங்க இதுவரையில் பார்த்ததில் மிக மேன்மையான மனிதர் இப்போது வந்திருக்கும் கவர்னர். தன்னால் முடிந்த அளவுக்கு தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைக்கிறார்.
அவர் தமிழ் பேசவும், வாசிக்கவும் கற்றுக் கொள்வதற்கு மக்கள்தான் காரணம். அதாவது கோயமுத்தூரில் அதிகாரிகளுடனான ஆய்வுக்குப் பின் சில சாமான்ய மனிதர்களை சந்தித்தபோது அவர்கள் கூறிய குறைகளை இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் இருந்த தகவல்களையும் இவரால் வாசிக்க முடியவில்லை. யாராவது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிமாற்றம் செய்து சொல்ல வேண்டியிருக்கிறது.
அதனால்தான் தமிழ் கற்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்த மாநிலத்தின் மிக முதன்மையான அதிகாரிகயாக இருக்கும் தான் இந்த மாநிலத்தின் மொழியை பேச, எழுத, புரிய தெரிந்து வைத்தால்தான் சாமான்ய மக்களின் உணர்ச்சிகள் புரியும். அதன் மூலம் அவர்களின் தேவையின் அவசரத்தை புரிந்து செயலாற்ற முடியும் என்று சொல்கிறார்.
இதுவும் போக இனி தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , கீழ்நிலை அதிகாரிகளையும் கூட அழைத்து அவர்களின் பணிகளைப் பற்றி பேச இருக்கிறார். அப்போது அவர்கள் தமிழிலில்தான் பதிலளிப்பார்கள். தமிழ் தெரிந்திருந்தால்தான் அவர்கள் சொல்வதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தான் புரிந்து கொள்ள முடியும்! அவர்கள் சொல்வது பொய் என்றால் உடனேயே கார்னர் செய்ய முடியும்!
தேவைப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் கவர்னர் நினைக்கிறார். அவசியமென்றால் அமைச்சர்களை கூட அதிரடிக்க தயங்கமாட்டார் புரோகித். எனவேதான் வேக வேகமாக தமிழ் கற்கிறார் கவர்னர்.” என்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தமிழில் குறுக்கு விசாரணை கேட்டு கவர்னர் மடக்கும் காட்சியை கற்பனை செய்தாலே கூட மனசு குதூகலிக்குமே உங்களுக்கு!
