துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் பதவி கேட்டதாக வெளியான தகவல் வாரணாசியில் இருந்து கசிந்து இருப்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக சென்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்பியதிலிருந்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பாஜகவின் அழைப்பை ஏற்று தான் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டாலும் அவர் சென்று வந்ததன் பின்னணியில் தமிழக அரசியலும் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களே கூறுகின்றனர். இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக ஒன்றாக இணையும் போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு டெல்லியில் இருந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அது மிக முக்கியமான வாக்குறுதி இரண்டு வருடங்களில் மீண்டும் உங்களை முதலமைச்சராக்கி விடுகிறோம் என்பது தான். இதனை நம்பித்தான் துணை முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார் என்று அப்போதே பேச்சுகள் எழுந்தன.இந்த நிலையில்தான் வாரணாசி சென்றிருந்த ஓபிஎஸ் அந்த வாக்குறுதி குறித்து பாஜகவின் நிர்வாகி ஒருவரிடம் பேசியதாகவும் அதற்கு அந்த நிர்வாகியும் உயர் பொறுப்பில் இருக்கும் அந்தத் தலைவரிடம் கூறியதாகவும் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து டெல்லி மேலிடம் ஆளுநர் பதவி தருவதற்கு தயார் ஆனால் முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்று பன்னீர்செல்வத்திற்கு பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தத் தகவலை ஓபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை ஆளுநராக மாறு டெல்லி கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்று புலம்பினார் ஓபிஎஸ். இந்தத் தகவல் தான் காற்றுவாக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் வந்து அடைந்துள்ளது. சற்றும் தாமதிக்காது தங்க தமிழ்செல்வன் இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்தி ஓபிஎஸ் தரப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்.